பதிவு செய்த நாள்
29
ஏப்
2025
11:04
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துார் அருகிலுள்ள தேவர் குந்தாணியில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த குந்தாணி சிலையை, மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் கண்டுபிடித்துள்ளன.
அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: சின்னகொத்துாரிலுள்ள குந்தாணி மலையடிவாரத்தில், ஒரு நகரமும், அரண்மனைகளுக்கான தடயங்களும் உள்ளன. கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஒரு பகுதியை ஒய்சாள மன்னன் வீர ராமநாதன், 13ம் நுாற்றாண்டில், குந்தாணியை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். அதை உறுதி செய்யும் விதமாக தேவர்குந்தாணியில் ஆதாரம் கிடைத்துள்ளது. இங்கு, நாகர் சிலைக்கு அருகே பாதி புதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை தோண்டி பார்த்ததில், வரலாற்று பொக்கிஷமான, சோழர்களின் குலதெய்வம் நிசும்பசூதனி தெய்வம் கிடைத்துள்ளது. இவை, 11ம் நுாற்றாண்டின் கலையம்சத்தில் உள்ளன. தட்டையான உடலமைப்புடன், பீடத்தில் அமர்ந்துள்ள நிலையில் உள்ளது. நான்கு கைகளுடன் உள்ள குந்தாணி அம்மனின் ஒரு கையில், சூலாயுதத்தை பிரயோகிக்கும் நிலையிலும், 2வது கையில் உடுக்கை, 3வது கையில் பாசக்கயிறு, 4வது கையில் பாத்திரம் ஏந்தியவாறு காணப்படுகிறது. காலில் நிசும்பன் என்ற அரக்கனை வதம் செய்யும் காட்சி காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக நின்று வதம் செய்யும் காட்சி இல்லாமல், இங்கு அமர்ந்த நிலையில் காணப்படுவதால், குந்தியம்மன் என்ற பெயர் வந்திருக்கலாம். இந்த அம்மன் பெயரால் ஒரு ராஜ்ஜியம் உருவாக்கி, அதன் பெயரையும் குந்தாணி ராஜ்ஜியம் என வைத்து, தலைநகர் குந்தாணி எனவும் வைத்திருக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.