பதிவு செய்த நாள்
30
ஏப்
2025
09:04
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள திருத்தேர் வெள்ளோட்ட விழா இன்று மாலை விமரிசையாக நடக்க உள்ளது. திருப்பூர், நல்லுார் விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கடந்த 1713ம் ஆண்டில், கோவில் கட்டப்பட்டதாக, கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன; 2000வது ஆண்டுக்கு பின், 2023ல் கும்பாபிஷேகம் நடந்தது. வேறு எங்கும் இல்லாத வகையில், சப்தரிஷிகளும், சப்தகன்னிமார்களும் சுவாமியை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
சிவபெருமானை நோக்கியுள்ள அதிகாரநந்நி, வலது காலை ஊன்றி படுத்தபடி, நேருக்குநேர் தரிசனம் செய்தபடி காட்சி யளிக்கிறது. ஏராளமான சிறப்புகளை கொண்ட நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு, புதிதாக தேர் வடிவமைத்து, தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் முருகேசன் தலைமையிலான அறங்காவலர்கள் சிவக்குமார், ஜெகதீசன், பிரியா கனகராஜ், அன்னபூரணி ஆகியோர் அடங்கிய குழுவினரால், தேர் திருப்பணி துவக்கப்பட்டது. மொத்தம், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சேலம், திம்பம்பட்டி ஸ்பதியர் மூலமாக, தேர் எழிலுடன் வடிவமைக்கப்பட்டது; இன்று வெள்ளோட்டம் நடக்கிறது. நேற்று மாலை, விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தியுடன், முதல்கால வேள்விபூஜைகள் துவங்கியது. அறங்காவலர் குழுவினர், விநாயகர் தேர் மற்றும் விஸ்வேஸ்வரர் தேர்களுக்கு காப்புக்கட்டி வழிபட்டனர். இன்று காலை, 6:00 மணிக்கு 2ம் கால வேள்வி பூஜையும், காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள், தேர்தல்களுக்கு கும்பாபிஷேகமும், பலிதானம் மற்றும் மகாதீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, சுவாமிகளை தீர்த்த கலசங்களில் எழுந்தருள செய்து, தேரின் மீது அலங்கரித்து வைத்து, தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. வெள்ளோட்டம் நிறைவு பெற்றதும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பக்தர்களுக்கு அழைப்பு; அறங்காவலர் குழு தலைவர் முருகேசன் கூறுகையில்,‘‘ஒவ்வொரு ஆண்டும், ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தேர்த்திருவிழா நடத்தப்படும். தேர்த்திருவிழாவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; வாழ்வில், வெள்ளோட்டத்தை ஒருமுறை மட்டுமே காண முடியும். எனவே, வெள்ளோட்ட நிகழ்ச்சியை, பக்தர்களை அழைத்து விமரிசையாக நடத்தி வருகிறோம். கைலாய வாத்தியம், கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், கம்பத்தாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பக்தர்கள், வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, விஸ்வேஸ்வர சுவாமியின் பேரருளுக்கு பாத்திரமாகலாம்,’’ என்றார்.