பதிவு செய்த நாள்
03
மே
2025
06:05
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், 63 நாயன்மார் கிரிவலம் சென்றனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், கடந்த மே 1ம் தேதி, சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது.விழாவின் மூன்றாம் நாள் உற்சவமாக, இன்று 63 நாயன்மார், கிரிவலம் சென்றனர். காலை வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியர், 63 நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அலங்கார வேதகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். அவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியர், காலை 7:30 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டனர். 63 நாயன்மார் அவர்களை நோக்கியவாறு அணிவகுத்தனர். மலைக்கோவில் அடிவாரம் சென்று வணங்கி, கிரிவலம் சென்றனர். பக்தர்களும் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
அதிகார நந்தி சேவை; அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவின் இன்று அதிகார நந்தி சேவை நடந்தது. அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை பிரமோற்சவ திருவிழா, கடந்த மே 1 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, இளங்கிளி அம்மனும், ஆட்சீஸ்வரரும் பெரிய அதிகாரி நந்தியில் எழுந்தருளி, கோபுர தரிசனத்தில் அருள் பாலித்தனர். உற்சவ மூர்த்திகளான 63 நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது.