பதிவு செய்த நாள்
05
மே
2025
10:05
திருவண்ணாமலை; கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், தமிழகத்தில் நேற்று தொடங்கியது. வரும், 28ம் தேதி வரை உள்ளது. இக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும். இந்த நேரங்களில் சிவபெருமானை குளிர்விக்கும் விதமாக, சிவன் கோவில்களில், உச்சிக்கால அபிஷேக பூஜை நேரமான, 11:30 மணி முதல், சாயரட்சை பூஜை நேரமான மாலை, 6:00 மணி வரை, தாராபாத்திர அபிஷேகம் நடத்தப்படும். பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை தாரா பாத்திரத்தில் ஊற்றி, மூலவர் சிவலிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி செய்வர். இந்நிகழ்வு நேற்று தொடங்கியது. இதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை, கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடங்கியது. வரும், 28ம் தேதி வரை இந்த அபிஷேக நிகழ்வு தொடரும்.