முதியவர்களை வயோவிருத்தர் என்று குறிப்பிடுவர். வயதில் மூத்தவர்கள் என்று இதன் பொருள். ஆனால், மனிதன் வயதால் மட்டும் பெரியவனாக இருக்கக் கூடாது. அறிவாலும், ஒழுக்கத்தாலும் பெரியவனாக வேண்டும். இதற்கு இளமையில் இருந்தே பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களை, ஞானசீல வயோவிருத்தர் என்றே சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. வேதகால ரிஷிகள் அனைவரும் ஞானசீல வயோவிருத்தர்களாகவே வாழ்ந்தனர். திருவள்ளுவரும், கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்றும், ஒழுக்கமே உயிர் என்றும் பாடியுள்ளார். கற்க வேண்டியதைத் தெரிந்து கொள்வதோடு, ஒழுக்கத்தோடு அதைப் பின்பற்றுபவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் நமக்கு வலியுறுத்துகிறார்.