பதிவு செய்த நாள்
07
மே
2025
02:05
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக துவங்கியது.
திருமலையில் மூன்று நாள் பத்மாவதி தாயார் பரிணயோத்சவம் நேற்று மே 06ல் துவங்கி நாளை வரை கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோத்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீனிவாசரின் தெய்வீக திருக்கல்யாணம் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
ஸ்ரீ பத்மாவதி பரிணயத்ஸவத்தின் முதல் நாளில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜவாகனத்தில் பரிணயத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளினார். பல்வேறு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மண்டபத்தில்ஸ்ரீ சுவாமி மற்றும் அம்மனுக்கு சீறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீ சுவாமிக்கு கொலுவு (மன்றம்) நடைபெற்றது. தொடர்ந்து சதுர்வேதம் ஓதுதல் மற்றும் மலஹரி, தேசிகா, சௌராஷ்டிரா, வராஹி, கடனா குதுஹலா மற்றும் நீலம்பரி போன்ற பல்வேறு ராகங்கள், தாளங்கள் மற்றும் வாத்தியங்கள் வாசிக்கப்பட்ட நிலையில், சுவாமி மற்றும் அம்மாவரின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டு, பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்த மூன்று நாள் நிகழ்வில், இரண்டாவது நாளில் அஸ்வ வாகனத்திலும், கடைசி நாளில் கருட வாகனத்திலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி அருள்பாலிப்பார். இந்த மூன்று நாட்களில் அர்ஜித பிரம்மோத்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.