பதிவு செய்த நாள்
08
மே
2025
10:05
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவின்தேர் திருவிழாவில் நேற்று, ஏராளமான பக்தர்கள் குவிந்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் தினசரி காலை, இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். கடந்த 3ம் தேதி, 63 நாயன்மார்கள் கிரிவல ஊர்வல வைபவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று பிரதான விழாவான தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. வேதகிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் எழுந்தருளினர். காலை, 6:00 மணியளவில் தேரடியிலிருந்து, ஐந்து தேர்களையும் பக்தர்கள் வடங்களை பிடித்து இழுத்தனர். இதில், மாவட்டத்தில்இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மக்கள் வெள்ளத்தில் திருக்கழுக்குன்றம்குலுங்கியது. தேர் வரும் வீதிகளான மேட்டுத்தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு ஆகிய தெருக்களில் நீர், மோர், தண்ணீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதகிரீஸ்வரர் மலை, பக்தவத்சலேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பிற்பகல் 1:00 மணியளவில், ஐந்து தேர்களும் கோவில் முன்புள்ள தேரடிக்கு வந்தடைந்தன.
விழாவில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாற்று உடையிலும் ரகசியமாக கண்காணித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், உபயதாரர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டன. மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து மாற்றம்: தேருக்கு இடையூறு இல்லாத வகையில் திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு மார்க்கத்திலிருந்து நகர்க்குள் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன.அதேபோல், மதுராந்தகம் போன்ற பகுதிகளிலிருந்து கருங்குழி சாலையில் வரும் வாகனங்கள், அச்சாலையில் திருக்கழுக்குன்றம் அருகே பார்க்கிங் அமைத்து, அங்கு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.
ஐந்து தேர்கள் தனிச்சிறப்பு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பஞ்சரத தேர்த் திருவிழாவில் ஐந்து தேர்கள் வீதி உலா நடைபெறுவது தனிச்சிறப்பு. விழாவில், முதலில் விநாயகர் தேரும், இரண்டாவது வேதகிரீஸ்வரர் பெரிய தேரும், மூன்றாவது திரிபுரசுந்தரி அம்பாள் தேரும், நான்காவது முருகர் தேரும், ஐந்தாவது சண்டிகேஸ்வரர் தேரும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா அல்லாத நாட்களில் இந்த தேர்கள் அனைத்தும், கோவிலுக்கு வெளியே பாதுகாப்பு கூரையுடன் நிறுத்தி வைக்கப்படுகின்றன.