மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2025 04:05
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மானாமதுரை வீர அழகர் கோயிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று துவங்கியதையடுத்து காப்பு கட்டுதலுக்காக அதிகாலை சுவாமிக்கு 18 வகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் வீர அழகர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பின்னர் அர்ச்சகர் கோபி மாதவன் சித்திரை திருவிழாவின் துவக்கமாக உற்சவர் வீர அழகரின் கைகளில் மஞ்சள் கயிறால் ஆன காப்பு கட்டுதலை நடத்தி வைத்தார். முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை மே 11ம் தேதி இரவு 10:00 மணியிலிருந்து 11:00 மணிக்குள்ளும், மே 12ம் தேதி வீர அழகர் ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் ஆற்றில் இறங்குதல் காலை 6:00 மணியிலிருந்து 6:48 மணிக்குள்ளும் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வைகை ஆற்றுக்குள் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் நிலாச்சோறு நிகழ்ச்சியும், மே 14ம் தேதி தசாவதார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.