பதிவு செய்த நாள்
12
மே
2025
10:05
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி பல்லாக்கில் ஏழூர் சப்தஸ்தான தளங்களுக்கு புறப்பட்டு சென்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலில், சித்திரை சப்தஸ்தான திருவிழா 13 நாட்கள் ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு, கடந்த 01ம் தேதி கொடியேற்றத்துடன் சப்தஸ்தான விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஐயாறப்பர் அம்பாள் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்வான இன்று ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களுக்கு ஐயாறப்பர் அம்பாள் கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை திருமண கோலத்தில் வெற்றிவேர் பல்லாக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அலங்கார தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை கோபுர தரிசனம் என பல நிகழ்வுகள் வேதங்கள் முழங்க மேலதாள இன்னிசை கச்சேரியுடன் ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்களின் மத்தியிலேயே புறப்பட்டு சென்றார்.
சப்தஸ்தான முதல் தலமான திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பந்துருத்தி, திருநெய்தானம் வந்து நாளை திருவையாறு தேரடி திடலில் ஏழூர் கண்ணாடி பல்லாக்குகளும் ஒரே இடத்தில் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. விழாவின் ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி, கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் சொக்கலிங்கம் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகம் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்.