பதிவு செய்த நாள்
13
மே
2025
10:05
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து, கர்நாடகா மாநிலம், சிருங்கேரி அருகில் கிக்கா கிராமத்தில் ரிஷ்யசிருங்கர் கோவிலில் சகஸ்ர சண்டி யாகமும், மஹா ருத்ர யாகம் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது.
கஷ்யப மகரிஷியின் புதல்வரான விபாண்டக மகரிஷி திரேதா யுகத்தில் சிருங்கேரியில் தவம் இயற்றினார். அதனை மெச்சி சிவபெருமான் மலஹானி கரேஸ்வரராக சுயம்பு லிங்க வடிவில் சிருங்கேரியில் அருள் புரிகிறார். விபாண்டக மகரிஷியின் தவப்பயனால் பிறந்த குழந்தையானது ஒரு சிறிய கொம்புடன் மான் உடம்பிலிருந்து பிறந்ததாலும், ரிஷி குமாரன் ஆகிற படியாலும் அவருக்கு ரிஷ்ய சிருங்கர் என பெயர் பெற்றார். ரோமபாதரின் பெண் சாந்தா என்பவரை ரிஷ்ய சிருங்கருக்கு மணம் முடிக்கப்பட்டது. ரிஷ்யசிருங்கர் பல காலம் சிருங்கேரிக்கு அருகிலுள்ள நரசிம்ம பர்வதம் எனும் இடத்தில் தவம் இயற்றினார். ரிஷ்யசிருங்கரும், கிக்கா கோவில் சிவலிங்கத்திலேயே ஐக்கியமாகி தற்போதும் சாந்தாம்பா சமேத ரிஷ்யசிருங்கேஸ்வரராக அருள் புரிந்து வருகிறார்.
சிருங்கேரி சாரதா பீடத்தின், 34வது பீடாதிபதியாக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் இக்கோவிலில் சாந்தா அம்பாளுக்கு தனியாக ஒரு மூர்த்தியினை பிரதிஷ்டை செய்து, 1925ல் கும்பாபிஷேகம் செய்தார். இதன், 100வது ஆண்டான இந்தாண்டில் இக்கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த யாகங்கள், நம் நாட்டின் நன்மைக்காக நடைபெற்றன. நம் நாடு நன்றாக இருக்கவும், ராணுவம் சிறப்பாக செயல்படவும், விசேஷ பிரார்த்தனையாக அர்களா ஸ்தோத்திரம், 10 ஆயிரம் முறையும், நவாக்ஷரி மந்திரம், 10 லட்சம் முறையும், 5 ஆயிரம் முறை சிவ பஞ்சாக்ஷ்ரியும் ஐந்து நாட்கள் ஜபிக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று, ஸ்ரீசன்னிதானம் தனது அருளுரையில் கூறியதாவது: சிருங்கேரி சாரதாம்பாளுக்கும் மலஹானிகரேஸ்வரருக்கும் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் கிக்கா ரிஷ்ய சிருங்கர் கோவிலுக்கும், 108 அடி உயரமுள்ள ராஜகோபுரம் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரர், ஸ்ரீஸ்ரீ மஹா சன்னிதானம் அனுக்ரத்துடன் அமைய வேண்டும். இதுதவிர இந்த யாகங்கள் தேச நலனையும், ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டதோ அது விரைவில் நிறைவேற வேண்டும். இவ்வாறு, சுவாமிகள் கூறினார். யாக பூஜைகளில், 200க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் ஐந்து நாட்களாக தொடர்ந்து யாகம், ஜபம், பாராயணம் நிகழ்த்தினார். இதற்காக ஏற்பாடுகளை ஸ்ரீமடத்தின் அதிகாரி முரளி செய்திருந்தார். - நமது நிருபர் -