பதிவு செய்த நாள்
13
டிச
2012
11:12
சபரிமலை: மகரவிளக்கு நாளில் நடைபெற்ற விபத்துக்கு பின், ஒரு ஆண்டு இடைவெளி விட்டு, மீண்டும் புல்மேடு வழியாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. போலீசார் இந்த பாதையை கண்காணித்து வருகின்றனர்.புல்மேட்டில் 2011 ஜன., 14 மகரவிளக்கு நாளில் ஜோதி தரிசனத்திற்கு பிறகு, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பின், கடந்த ஆண்டு புல் மேடு வழியாக பக்தர்களின் வருகை குறைந்திருந்தது. இந்த பாதையில் தனியார் வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். குமுளி வழியாக வரும் தமிழக பக்தர்களுக்கு வண்டிபெரியாறு, சத்திரம் வழியாக வருவது சுலபம். எனவே, இப்பாதையில் தற்போது பக்தர்கள் வருகின்றனர். குமுளியில் இருந்து வண்டிபெரியாறு வரை கேரள அரசு பஸ்களும், வண்டிப்பெரியாறில் இருந்து சத்திரம் வரை தனியார் ஜீப்கள் மற்றும் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது. 4 பேர் செல்லும் ஆட்டோவுக்கு 500 ரூபாயும், 8 பேர் செல்லும் ஜீப்புகளுக்கு 800 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகமாக உள்ளதால், பம்பை வழியாக வரும் பக்தர்கள் பல மணி நேரம் "கியூவில் நிற்க வேண்டியுள்ளது. ஆனால், சத்திரம் வரை ஜீப்பில் வந்தால் 3 கி. மீ., தூரம் நடந்து சன்னிதானம் வந்து, "கியூவில் நிற்காமல் படியேறிவிடலாம் என்பதால், இந்த வழியாக பக்தர்கள்அதிக அளவில் வருகின்றனர்.இப்பாதையை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். எனினும், மாலை 3 மணிக்கு பின், வண்டி பெரியாறில் இருந்து சத்திரத்துக்கு வாகனங்கள் செல்ல, போலீசார் அனுமதிப்பதில்லை.