பதிவு செய்த நாள்
16
மே
2025
12:05
பந்தலூர்; பந்தலூர் அருகே பன்னிக்கல் பழங்குடியின கிராமத்தை ஒட்டிய, பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் திருவிழா நேற்று தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. முன்னதாக கிராமத்தில் உள்ள கோவில் வீட்டில் இருந்து, விரதம் இருந்தவர்கள் உரலில் இடித்து பூஜைக்கான அவல் தயாரித்தனர். மேலும் பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பழங்கள், வாள் ஆகியவற்றையுடன், ஒரு நாள் முழுவதும் பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து, அம்மன் உத்தரவு பெறப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அங்கு மரத்தடியில் உள்ள அம்மனுக்கு பூஜாரி லட்சுமணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் சாமியாடிகள் தேங்காய் உடைத்து குறி சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், பக்தர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறப்பட்டது. அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர். செயலாளர் சந்திரன் கூறுகையில், சமீப காலமாக பழங்குடியின மக்களை குறிவைத்து மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பழங்குடியின மக்களின் கலாச்சாரம், ஆன்மீக நிகழ்ச்சிகள் படிப்படியாக அழிந்து வரும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் விதமாக தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும், கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாவிற்கு அனைத்து தரப்பு மக்களும் உதவி செய்வது மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிலையில், பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்யும் நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மண்ணின் மைந்தர்களின் கலாச்சாரத்தை காப்பாற்ற முன் வர வேண்டும் என்றார். பூஜைகளை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, விஜயகுமார், விஷ்ணு, மாதன், ராஜன், மாரிகண் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர்.