இருப்பிடம் சேர்ந்தார் கள்ளழகர்; பூக்களை தூவி, சுவாமிக்கு திருஷ்டி கழித்து பக்தர்கள் பரவசம்
பதிவு செய்த நாள்
16
மே 2025 12:05
மதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிர்வித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வளைதடி, நேரிகம்பு, வாள், சங்குசக்கரம் உள்ளிட்ட பஞ்சாயுதங்களுடன் தங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு திரும்பினார். மதுரை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர், பூப்பல்லக்கில் நேற்று அழகர்கோவிலுக்கு புறப்பட்டார். மழை பெய்து நீர்வளம், விவசாயம் செழிக்க வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க, அழகர்கோவிலில் இருந்து கள்ளர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மே.,10ல் மதுரை புறப்பட்டார். மே.,11 மூன்று மாவடியில் எதிர்சேவை, மே.,12 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மே.,13 தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடந்தது. நேற்று அதிகாலை 3:45 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் அருகே ராமநாதபுரம் சேதுபதி மண்டகபடியில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். மூன்று மாவடியில் இருந்து இரவு 7:00 மணிக்கு அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். இன்று (மே.,16) அப்பன்திருப்பதி, கள்ளந்திரியில் எழுந்தருளிய பின் காலை கள்ளழகர் கோயில் சென்றடைந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வரவேற்றனர். சுவாமிக்கு பூசணிக்காய்கள் வைத்து தீபமேற்றி திருஷ்டி கழித்தனர். மேளதாளம் முழங்க, பக்தர்களின் கரகோஷங்களுடன் கள்ளழகர் இருப்பிடம் சேர்ந்தார். நாளை உற்சவ சாந்தி நடக்கிறது.
|