பதிவு செய்த நாள்
17
மே
2025
09:05
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைணவ தலங்களில் முக்கியமானது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள், மூலிகை ஓவியங்கள், கல்வெட்டுகள் உடையது. இக்கோவில், 28 ஏக்கர் 22 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ராஜகோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள் உள்ளன. மேற்கு ராஜகோபுரம் 96 அடி உயரம், 92.5 அடி அகலம் கொண்டது. கிழக்கு ராஜகோபுரம் 125 அடி உயரம். 99 அடி அகலம் கொண்டது.
சென்னையில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள பகுதி விஷ்ணுகாஞ்சி என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், திருமலை என அழைக்கப்படும் சிறிய மலை மீது பெருமாள் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இக்கோவில் தேவராஜ சுவாமி கோவில் என்றும், பெருமாள் அருளாளன், வரதராஜன், தேவாதிராஜன் என அழைக்கப்படுகிறார்.
பெருந்தேவி தாயார் பங்குனி மாதம் உத்திர திருநட்சத்திரத்தில் ப்ருகவின் வேள்வியில் அவதரித்தவர். தேவராஜனை அர்ச்சித்து திருமணம் செய்து கொண்டவர். பெருந்தேவி தாயார், வரதராஜப் பெருமாள் திவ்ய தம்பதியர் என வணங்கப்படுகின்றனர்.
வேதாந்த தேசிகர் ஒரு ஏழையின் திருமணத்திற்காக இத்தாயாரை துதி செய்து தங்க மழை பொழிய செய்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சி வரதர் பல்வேறு அலங்காரங்களில், காலை, மாலை நேரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை தங்க சப்பரத்தில், வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் வரதராஜ பெருமாள் உலா வந்தார்.
இதில், ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் இன்று, காலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருகிறார். தேரோட்டம் நடக்கும் சாலை முழுதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும்.