பதிவு செய்த நாள்
18
மே
2025
12:05
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை,கருடசேவை, அனுமந்த வாகனம், கேடய புறப்பாடு, நாக வாகனம், ஆளும்பல்லக்கு, ஹம்ச வாகனம், பெருமாள் தாயார் திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட உற்சவங்கள்தினமும் விமரிசையாக நடந்தன.
பிரம்மோத்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. காலை 8:30 மணிக்கு வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் புறப்பட்ட பெருமாள், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாண வேடிக்கை, மங்கள இசையுடன் ‘கோவிந்தா... கோவிந்தா’ என கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்களுக்காக, தன்னார்வலர்கள் குளிர்பானம், மோர் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். மின்வாரியம், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கரியமாணிக்க பெருமாள்
ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் வார்ஷிகாபிரம்மோத்சவ விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் யாளி, சேஷ, கருட, அனுமன் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.