பதிவு செய்த நாள்
19
மே
2025
11:05
கோவை; கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். சிங்காநல்லுார் அருகே கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் திருக்கல்யாணம், மாரியம்மன் திருவிழா கடந்த, 8ம் தேதி பூசாரி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, முனியப்ப சுவாமி, ராசண்ணன் சுவாமி, கருப்பராயன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பஞ்சகாவியம், காப்புகட்டுதல், மா இலை தெளித்தல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பல்வேறு நிகழ்ச்சிகளை அடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கல்யாண உற்சவம் கடந்த, 16ம் தேதி நடந்தது. மறுநாள், காமாட்சியம்மன் ஆற்றங்கரைக்கு சென்று கரகம் அலங்கரித்து திருவீதி உலா நடந்தது. நேற்று, மாரியம்மன் சக்திகரகம் அலங்கரித்து நடந்த, திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிளேக் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும், தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பெண்கள், காமாட்சியம்மன் கோவிலை அடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறைவாக, இன்று மஞ்சள் நீராட்டு நடக்கிறது.