பதிவு செய்த நாள்
23
மே
2025
10:05
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, கரப்பாடி உள்ளிட்ட, 12 கிராமங்களுக்கும் பொதுவான, கரப்பாடி காளியம்மன் கோவில் தேர்திருவிழா விமரிசையாக நடக்கிறது. திருவிழா கடந்த, 6ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கிராம சாந்தி, கொடியேற்றுதல், சக்தி அழைத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த, 20ம் தேதி இரவு, 12:00 மணிக்கு கொண்டேகவுண்டன் பாளையம் அரண்மனையார் வீட்டு மாவிளக்கும், முளைப்பாரியும், கொண்டேகவுண்டன்பாளைத்தில் இருந்து கோவிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர். அதன்பின், மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அம்மன், திருத்தேரில் எழுந்தருளினார். முதல் நாளான தேரோட்டம், மாலை, 5:30 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி இரவு, பாரிவேட்டை, அபிஷேகம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது.