முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 12:05
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இன்று (23ம் தேதி) யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடைபெற கோவில் நிர்வாகம் முன் வந்தது. அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் ஜூலை 14ம் தேதி அதிகாலை 5 :25 மணி முதல் 6:10 மணிக்கள் மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கோவில் உற்சவர் மண்டபத்தில் முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முகூர்த்தகாலை சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவில் கந்த சஷ்டி மண்டபம் அருகே யாகசாலை மண்டபம் அமையும் இடத்தில் நவதானியம் பால் ஊற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் முகூர்த்தக்கால் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து முகூர்த்த காலுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்ட பின்னர் ஜூலை 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14ம் தேதி அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பாக துணை ஆணையர் சூரிய நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.