குப்பனூர் ஊராட்சி, குன்னியூரில், 1917ம் ஆண்டு முதல் ஆதி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலையில் மாகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலையில் புதிய விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு கணபதி பூஜை, முதற்கால வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. வேள்வி சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்து வரப்பட்டன. நேற்று காலை 8:15 மணிக்கு, மூலவருக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை, தீபாராதனை, தச தரிசனம் நடந்தது. செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.