பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
03:06
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயிலில் ஆனித் திருவிழா வருடம் தோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.விழா நாட்களின் போது சுவாமிகள் அன்னம்,கமலம்,சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,சந்தனம்,இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு,ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அபிஷேக,ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 7ம் தேதியும், 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகர் செல்லப்பா குருக்கள், மற்றும் மேலநெட்டூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.