பதிவு செய்த நாள்
05
ஜூலை
2025
03:07
மயிலாடுதுறை; யானை என்பது உருவத்தில் பெரிதாக இருந்தாலும் பழக எளிதாக இருக்கும். "யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது பழமொழி. அந்தவகையில், யானையை பார்த்தாலே மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாகும். முன்பெல்லாம் யானை வீதிகளில் நடந்து வரும்போது அரிசி, வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கி ஆசி பெறுவது வழக்கம்.
கோவில்களில் யானைகளை கடவுளுக்கு இணையாக போற்றி வழிபடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் இறைவன் கருவறையை திறக்கும்போது முதலில் யானை தான் பெருமாளை வணங்கும். யானைகள் புனித நீர் எடுத்து வரும் கைங்கரியத்தில் ஈடுபடச் செய்தும் கஜ பூஜை செய்தும் போற்றி வருகின்றனர். காலப் போக்கில் கோவில்கள் மற்றும் தனியார் வளர்ப்பில் யானைகளின் எணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யும் செய்த வைணவ திருத்தலங்கள் கிராம கோவில்கள் என ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் 15கும் மேற்பட்ட யானைகள் இருந்தன. அனால் தற்போது நான்கு யானைகள் மட்டுமே உள்ளது.
கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை பூஜைக்கான புனித நீரை யானை மீது வைத்து கொண்டுவருவதும், கஜ பூஜை செய்து வழிபடுவதும் வழக்கம். அந்த வகையில் யானை இல்லாத கோவில்களுக்கு அருகாமையில் உள்ள கோவில்களில் இருந்தும், தனியாரிடமிருந்தும் யானைகளை கொண்டு வருவார்கள். அப்படி யானைகளை ஆன்மீக நிகழ்ச்சிகளில் யானைகளை பங்கேற்கச் செய்திட வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். முன்பெல்லாம் எளிதாக வழங்கப்பட்டு வந்த அனுமதி, காலப் போக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகே வழங்கப்படுகிறது. ஆன்மீக நிகழ்ச்சியில் யானையை பகிர்க்கச் செய்திட 20 நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர்கள் மூலம் சென்னையில் உள்ள தலைமை வன உயிரினக் காப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும். மேற்படி விண்ணப்பத்தை பரிசீலித்து, எந்த மாவட்டத்திற்கு யானை செல்ல உள்ளதோ அந்த மாவட்ட வன அலுவலருக்கு அனுப்பி வசதிகளை சரிபார்க்க உத்தரவிடப் படுகிறது. அவரின் பரிந்துரைக்கு பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. அதோடு, ஒரு முறைக்கு அதிகபட்சம் 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதிலும் ஒரு நிகழ்ச்சிக்கும் அடுத்த நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால் ஆன்மீக நிகழ்வுகளில் யானைகள் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று திருவாரூரில் பறவை நாச்சியார் உடனுறை ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சிக்கு யானையை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி கிடைக்காததால், யானை வாகனத்தில் புனித நீர் எடுத்து வந்துள்ளார்கள். வனஉயிரின பாதுகாப்பு என்ற பெயரில் நமது கலாச்சாரங்களை அழிக்கும் நோக்கில் வனத்துறை செயல்படுகிறது என்று ஆன்மீகவாதிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவில்களில் வழிபாடு மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் யானை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வனத்துறையும் தமிழக அரசும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பழைய முறைப்படி யானைகளை பாதுகாப்புடன் உரிய நேரத்தில் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்க செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.