பெருஞ்சேரி தாருகாவனம் 54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 11:07
மயிலாடுதுறை; வழுவூர் அருகே 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர். அவர்களது செருக்கை அடக்க சிவபெருமான் மற்றும் விஷ்ணு இணைந்து நடத்திய திருவிளையாடலின் போது சிவனை அழிக்க பல்வேறு மிருகங்களை யாகம் மூலம் தோற்றுவித்து தாருகாவனத்து முனிவர்கள் ஏவினர். இதில் முக்கியமாக யானையை உரித்து சிவபெருமான் நடனமாடி ஆடையாக அணிந்து கொண்டார். அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. அந்த முனிவர்கள் வசித்த புகழ்பெற்ற தாருகா வனத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. தாருகா வனத்து சித்தர் பீடம் என்று அழைக்கப்படும் இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த நான்காம் தேதி காவேரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றில் இருந்து புனித நீர் யானைகள் மேல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலையில் வைத்து புனித வேள்விகள் நடைபெற்றன. இன்று யாகசால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு 54 அடி உயர சிவன் வடிவ ஆலயத்தின் மேல் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மலர்கள் தூவி சுவாமிக்கு மகா அர்ச்சனை நடைபெற்றது. இதனை அடுத்து மூலவர் ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கத் திருமேணிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நமச்சிவாய மந்திரத்தை ஓதி வழிபாடு செய்தனர்.