கோவையின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் மதுக்கரை பகுதியில் மலைமேல் இருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவானது கடந்த 7ம்தேதி மாலை, 5:00க்கு திருவிளக்கு, விநாயகர், புனிதநீர், திருமகள் மற்றும் பேரொளி வழிபாடுகளுடன் துவங்கியது. 8ம் தேதி காலை, 8:45க்கு, ஐங்கரன் வேள்வி, 11:00க்கு மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல் வழிபாடு, பிற்பகல், 3:00க்கு திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு கொண்டு செல்தல், மாலை, 4:30க்கு முதற்கால வேள்வி நடைபெற்றது. 9ம் தேதி காலை, 6:30க்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம், மூன்றாம் கால வேள்வி நடைபெற்றது. இன்று காலை, 6:00 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், 6:15க்கு, நான்காம் கால வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலை, 7:45க்கு, திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மூலஸ்தானத்தின் கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.