பதிவு செய்த நாள்
19
டிச
2012
12:12
சபரிமலை: பக்தர்கள் வருகை அதிகரித்து, தரிசனத்திற்காக எட்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேரிடுவதால், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் நேரம், ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல உற்சவம் நடந்து வருகிறது. அதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், உணவு, உறக்கமின்றி, பல மணி நேரம், வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று முன் தினம் மட்டும், சபரிமலையில், அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால், சாமி தரிசனத்திற்கு எட்டு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.அதனால், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, நடையை முன்னதாகவே திறக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தினமும் காலை, 4:00 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை, மண்டல உற்சவம் முடியும் வரை, அதிகாலை, 3:30 மணிக்கு திறக்கப்படும். உச்சிக்கால பூஜை முடிந்து, நண்பகல், 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும், மாலை, 4:00 மணிக்கு நடை திறப்பதற்கு பதிலாக, 3:30 மணிக்கே திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பக்தர்கள் கூடுதலாக, ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.