பதிவு செய்த நாள்
10
ஜூலை
2025
03:07
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இந்தாண்டு நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
கிணத்துக்கடவில், பழமையான பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், சஷ்டி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார வழிபாடும் நடக்கிறது. இந்நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 23 ஆண்டுகளாகிறது. தற்போது, கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ரோடு சரியில்லை; வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாத நிலையில் இருக்கும் பக்தர்கள், கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வகையில், பின் பகுதியில் மலைப்பாதை உள்ளது. ஆனால் இந்த பாதையில் முறையான ரோடு வசதி இல்லை. ரோட்டை சீரமைக்க பல நாட்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டது. அதன்பின் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
புதுப்பொலிவு பெறுமா?; கோவில் முன் மண்டபம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இப்போது வரை வண்ணம் பூசுப்படவில்லை. முருகர் பாதம் இருக்கும் இடத்தின் மேல், கோபுர பகுதியில் சிற்பம் சேதம் அடைந்துள்ளது. இதுமட்டுமின்றி இடும்பர், விநாயகர், மூலவர் சன்னதி கோபுரங்களிலும் சிற்பங்கள் சேதமடைந்தும், செடிகள் முளைத்தும் பொலிவிழந்து காணப்படுகிறது. விரைவில் வண்ணம் பூச வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாதுகாப்பில்லை; பக்தர்கள் மலை ஏறி செல்லும் படிக்கட்டின் ஓரத்தில் கைப்பிடி ஆடுவதால் அச்சப்படுகின்றனர். ஒரு இடத்தில் கைப்பிடி உடைந்துள்ளது. இத்துடன் பக்தர்கள் மாலை நேரத்தில் வரும் போது சமூக விரோதிகள் சிலர் மலை ஏறும் இடத்தில் இருக்கும் மண்டபத்தில் படுத்து தூங்குகின்றனர். சில நேரங்களில், கோவிலின் ஒரு பகுதியில் காதல் ஜோடியில் அதிக அளவில் உலா வருகின்றனர். மேலும், சிலர் கோவில் பின்பக்க பகுதியில் அமர்ந்து மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். பக்தர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். கோவில் அடிவாரத்தில் அதிகாரி அலுவலகம் மற்றும் நுழைவு பகுதி அமைந்துள்ளது. அலுவலகத்தின் உட்பகுதியில் கான்கிரீட் பூச்சு சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. நுழைவு பகுதியும் சேதமடைந்து காணப்படுகிறது. அலுவலகத்தில் அர்ச்சனை சீட்டு வழங்கும் இடமும் சேதமடைந்துள்ளது. இதனால், பக்தர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
தேரோட்டம் நடக்குமா?; கோவிலில், 2016ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது. அதன்பின், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு விரிவாக்க பணிகள் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடந்ததால் தேரோட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாலம் பணி நிறைவு பெற்ற பின், தேரோட்டம் நடக்கும் என பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், தேரின் அளவு மேம்பாலத்தை விட உயரமாக இருப்பதால் சிக்கல் ஏற்பட்டது. தேரின் உயரத்தை குறைத்து தேரோட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தேர் உயரத்தை மாற்றியமைத்து, தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை விரைவாக முடித்து, விரைவில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
விரைவில் துவங்கும்!; கோவில் செயல் அலுவர் கவுசல்யா கூறுகையில், ‘‘பொன்மலை கோவிலில் முதற்கட்டமாக இடும்பன் மற்றும் விநாயகர் சன்னதிக்கு முன்மண்டபம் கட்டும் பணிகளுக்கு, 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கருத்துரு தயார் செய்து, அதற்குரிய வேலைகள் நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்,’’ என்றார்.