பதிவு செய்த நாள்
14
ஜூலை
2025
08:07
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள காசி விஸ்வநாதரை வணங்கி, அங்குள்ள கங்கை தீர்த்தத்தை பருகினால் புண்ணியம் சேரும். இந்த தீர்த்தம் எப்படி உருவானது தெரியுமா....
முற்காலத்தில் கற்கிமுனி என்ற பூதம் சிவனிடம் அழியா வரம் கேட்டது. அதற்கு சிவன் ஒரு வழியையும் காட்டினார். அது என்ன தெரியுமா.... சிவபூஜை செய்யும்போது பிழை செய்யும் ஆயிரம் முனிவர்களை பலி கொடுத்தால் அந்த வரம் கிடைக்கும். அந்த வரத்தின் படி சிவபூஜையில் தவறிய 999 முனிவர்களை உயிருடன் குகைக்குள் பூதம் அடைத்தது. இன்னும் ஒரு முனிவர் மட்டும்தான். அவரை பலியிட்டால் வரம் கிடைத்துவிடும் என்ற நிலை... அந்த சமயத்தில் நக்கீரர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். மலையின் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் நீராடிவிட்டு கரையிலுள்ள ஆலமரநிழலில் அமர்ந்து சிவபூஜை செய்ய ஆரம்பித்தார். அப்போது பார்த்து அந்த மரத்தின் இலை ஒன்று தண்ணீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. அப்போது அங்கு நடந்த அதிசயத்தை பார்த்து பூஜையை பாதியிலேயே நிறுத்தினார் நக்கீரர். அதிசயம் என்ன தெரியுமா.. அந்த மரத்தின் இலை காற்றினால் தரையில் உதிர்ந்ததால் அது பறவையாக உயிர் பெற்று எழும். தண்ணீரில் விழுந்தால் மீனாக உயிர்பெறும். ஆனால் தற்செயலாக அந்த இலை தண்ணீரில் பாதியும், தரையில் மீதியுமாக விழுந்ததால் பாதி பறவையாகவும், மீனாகவும் மாறியது. இவை ஒன்றையொன்று தரைக்கும், தண்ணீருக்குள்ளும் இழுத்துக் கொண்டிருந்தது. இதை பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சர்யமாக இருக்காது. நக்கீரரும் இதை கண்டு வியக்கும் நேரத்தில் கற்கிமுனி பூதம் அவரை கவர்ந்து சென்றது. 999 பேர்களுடன் இவரையும் சேர்த்து ஆயிரம் பேர் ஆயிற்று.
அங்குள்ளோர் நக்கீரரைப் பார்த்து, ‘ஆயிரத்தில் ஒன்று குறைவாக இருந்ததால், தாங்கள் இதுவரை உயிருடன் இருந்தோம். நீர் வந்ததால் ஆயிரம் பேர் நிறைவாகிப் பூதத்துக்கு இறையாகப் போகிறோம்’ என்றும் கருத்தில், ‘ஒரு குறை நீக்க வந்தாய்’ என்றனர். உடனே நக்கீரர் அந்த இடத்திலேயே அமர்ந்து முருகன் மீது ‘திருமுருகாற்றுப்படை’ பாடினார். உடனே முருகன் மயில் வாகனத்தில் பறந்துவந்து பூதத்தை சம்ஹாரம் செய்து முனிவர்களையும் விடுதலை செய்தார். பிறகு நக்கீரர், ‘கங்கையில் நீராடி என் பாவத்தை போக்க வேண்டும். பூதம் என்னை தொட்டு துாக்கி வந்ததால் பாவம் ஏற்பட்டுவிட்டது. அதைப் போக்க காசி செல்கிறேன்’ என்றார். முருகனோ, ‘அதற்கு ஏன் அவ்வளவு துாரம் செல்கிறீர்கள். இந்த இந்த இடத்திலேயே காசி தீர்த்தத்தை உருவாக்குகிறேன்’ என்றார். அதன்படி தன் கையில் இருந்த வேலால் பாறையில் கீறியவுடன் மலைப்பாறையிலிருந்து கங்கை தீர்த்தம் உருவாகியது. அதில் நீராடி தன் பாவத்தை தொலைத்தார் நக்கீரர். அவர் பூஜை செய்த இடத்தைப் ‘பஞ்சசாட்சர பாறை’ என்கின்றனர். இந்த நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் தற்போது புரட்டாசி வெள்ளிக்கிழமையன்று முருகனின் வேல் மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருப்பரங்குன்ற மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சுவாமி மேற்கு திசை பார்த்து நாகபரணத்துடன் காட்சி தருகிறார். அனைத்து சிவன் கோயில்களிலும் மூலஸ்தானத்தில் லிங்கத்தின் ‘கோமுகம்’ இடதுபுறமாக இருக்கும். ஆனால் இங்கு வலது புறமாக காணப்படுகிறது. இது லட்சுமி கடாட்சத்தை குறிக்கும். விசாலாட்சி என்னும் பெயரில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். சுவாமி, அம்பாளையும் தம்பதியருடன் வணங்கினால் அனைத்து வகையான தோஷமும் தீரும். கோயிலுக்கு அருகே காசிச்சுனை என்ற அழகிய வற்றாத சுனை உள்ளது. இதில் இருந்து எடுக்கப்படும் கங்கை தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை பருகுவதன் மூலம் பாவம் போகும். புதுவாழ்வு மலரும். பழங்காலத்தில் இச்சுனையில் தேளி மீன்கள் என்னும் பலவண்ண மீன்கள் இருந்ததாகவும், இச்சுனை நீரில் நீந்திச் சென்று இப்பாறைச் சிற்பங்களுக்குப் பூஜை செய்ததாகவும் சொல்வர்.
இவரது சன்னதிக்கு அருகே வற்றாத காசி சுனை உள்ளது. அதன் அருகில் உள்ள பாறையில் நான்கு லிங்கம், ஐந்தாவதாக சிவன் தவக்கோலத்தில் இருப்பது போன்ற அமைப்பு உட்பட பஞ்ச லிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. அருகில் கற்பக விநாயகர் மூஷிக வாகனத்திலும், மயில் வாகனத்தில் முருகனும், கால பைரவரும் அருள்பாலிக்கின்றனர். எப்படி செல்வது: திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து கிரிவலம் செல்லும் சாலையில் ஒரு கி.மீ., துாரத்தில் மலைக்கு செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. அங்கிருந்து 621 படிகள், எட்டு மண்டபங்களை கடந்து கோயிலை அடையலாம்.
நேரம்: காலை 9:00 – மதியம் 12:30 மணி, பிரதோஷ நாளில் மாலை 4:00 – 6:30 மணி
மலை உச்சியிலுள்ள காசி விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் மயில் வாகனத்தில் சேவல் கொடி, சக்திவேலுடன் முருகன் அருள்பாலிக்கிறார். மலை அடிவாரத்தில் சிற்பமாக உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் புனுகு சாத்தப்படுகிறது. மாறாக வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் சிலர் மலையேறி வந்து இந்த முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். குறிப்பாக வியாபாரிகள் தொழில் வளர்ச்சி அடைய அதிகம் வருகின்றனர்.
மலை உச்சியில் மச்ச முனிவர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான மச்சமுனிவரின் ஜீவசமாதி உள்ளது. காசிவிஸ்வநாதர் கோயிலில் ஜோதி ரூபத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மூன்று வெள்ளிக்கிழமை வந்து வேண்டினால் சுக்கிர தோஷம் தீரும். கடன் பிரச்னையால் சிரமப்படுபவர்கள் வந்து வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கும் இவர் வரப்பிரசாதியாக இருக்கிறார். இவர் இன்றும் காசிச்சுனையில் மீன் வடிவில் நீந்திக் கொண்டிருப்பதாக ஐ தீகம் உண்டு.
ஒரு முறை ஆற்றின் கரையோரம் சிவனும், பார்வதியும் தனியாக இருந்தனர். அப்போது பார்வதிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் சிவன். அதை கவனமாக மீன் குஞ்சு ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது. இதையறிந்த சிவன் கருணை பொங்கிய பார்வையால் பார்க்கவே, அது மனித வடிவம் பெற்றது.
‘‘பல உபதேசங்களை கேட்டீர்கள். சிவதத்துவங்களையும், அஷ்டமாசித்திகளையும் அடைந்து, மச்சமுனி என்ற சித்தராகி எல்லோருக்கும் அருள் செய்யுங்கள். அதன்பின் என்னை வந்து அடையுங்கள்’’ என வரம் அளித்தார் சிவன்.
அதன்படி புண்ணாக்கீசர் முனிவரிடம் இருந்து பல தத்துவங்களை அறிந்து கொண்டார் மச்சமுனி. மேலும் நத்தி, போகர், காகபுஜண்டர், சட்டைமுனி இவர்களை அடிபணிந்து அஷ்டமா சித்திகளை அடைந்தார். இதை வைத்து வறுமையில் வாடியருக்கு எல்லாம் உதவி செய்தார்.
ஒரு முறை யாசகம் கேட்க ஒரு வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வீட்டுப்பெண் முகவாட்டத்துடன் பிச்சை வழங்கினாள். அதைக் கண்ட மச்சமுனிவர், ‘‘ஏனம்மா... உன் முகம் வாடியிருக்கிறது’’ எனக்கேட்டார்.
அவள் அழுதுகொண்டே, ‘‘நீண்ட நாளாக எனக்கு குழந்தை இல்லை’’ என்றாள்.
உடனே மச்சமுனிவர் தன்னிடம் இருந்த திருநீற்றை கொடுத்து, ‘‘இதை சாப்பிடு. நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என ஆசி வழங்கிவிட்டு சென்றார்.
இதை அறிந்த பக்கத்து வீட்டு பெண், ‘‘வந்தவர் போலிச்சாமியர் போல் இருக்கிறார். அந்த திருநீற்றை சாப்பிடாதே’’ என அவளது மனதில் விஷத்தை கலந்தாள்.
இதைக்கேட்ட அப்பெண்ணும் திருநீற்றை அடுப்புச் சாம்பலில் இட்டாள். சிலகாலம் கழித்து அங்கு வந்த மச்சமுனிவர், ‘‘குழந்தை எங்கம்மா’’ எனக்கேட்டார்.
‘‘சுவாமி. என்னை மன்னித்து விடுங்கள். தவறு செய்துவிட்டேன்’’ என அழுதபடி நடந்ததை கூறினாள்.
‘‘கவலைப்படாதம்மா’’ என சொல்லி, அடுப்பருகில் சென்றார். பின் ‘‘கோரக்கா... எழுந்து வா’’ என கூப்பிட்டார். அடுத்த நொடியே அந்தச் சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று எழுந்து வந்தது. அவர் திருநீறு கொடுத்த நாளில் இருந்து குழந்தை பிறந்திருந்தால், என்ன வயதிருக்குமோ அந்த வயதில் குழந்தை இருந்தது. மகிழ்ந்த அந்தப் பெண், முனிவரை போற்றி வணங்கினாள். அக்குழந்தையும் வளர்ந்து முனிவரிடம் உபதேசம் பெற்றது. அக்குழந்தைதான் ‘கோரக்கா சித்தர்’ ஆவார்.