கோவை; வேடப்பட்டி அஜ்ஜனூர் சாலையிலுள்ள, வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி கோவில் கும்பாபிஷேகம், வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் சூழ நேற்று விமரிசையாக நடந்தது.
மத்திய பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு, மூன்றாம் மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் ஹோமங்கள், பூர்ணாஹூதி, யாத்ரதானம், கடஉத்வானம் ஆகியவற்றை தொடர்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜித்த பூர்ணகும்பங்களையும், விமான கலசங்களையம் கருவறைக்குள் எழுந்தருளச்செய்தனர். ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில், சிவாச்சாரியர்கள் புனிததீர்த்தத்தை கோபுரகலசங்களின் மீதும், கருவறையிலுள்ள சுவாமிகளின் மீதும் ஊற்றினர். அப்போது மங்களவாத்தியங்கள் முழங்கியது, மலர்கள் துாவப்பட்டன. இதையடுத்து, கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீரம்யகணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீகல்யாண சுப்ரமணியர் மற்றும் நவக்கிரஹ சன்னதிகளுக்கும் புனித நீர் ஊற்றி, ஏக காலத்தில் சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அதன் பின், புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர் அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.