சீர்காழி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2025 10:07
மயிலாடுதுறை; சீர்காழியில் இன்று நடந்த காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சாலைக்கரையால் என போற்றப்படும் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கொடிமரம் பலிபீடத்துடன் கூடிய தனி சன்னதியில் அம்பாள் அருள் பாலிக்கிறார். மேலும் இங்கு வலம்புரி விநாயகர், பேச்சியம்மன், முனீஸ்வரர், ருத்ராபதியார், ஐயப்பன், காத்தவராயன், கருப்பண்ண சுவாமி, சப்த கன்னிகள், நாகர் சன்னதிகள் தனியே உள்ளன. தல விருட்சமாக வேம்பும் அரசும் உள்ளது. இக்கோவிலில் அருள் பாலிக்கும் காமாட்சியம்மனை ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். காமாட்சி அம்மனை வழிபடுபவருக்கு வேண்டுதல் அனைத்தும் உடனே நிறைவேறும் என கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 10ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன், 11ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று காலை 6 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானம் கடம் புறப்பாடு செய்யப்பட்டு காலை 9:30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதனை அடுத்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை பந்தல் கணேசன் தலைமையில் குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராம வாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.