சூலுார்; பாரதிபுரம் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. சூலுார் அடுத்த பாரதிபுரத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை முற்கால ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்திரேஸ்வரா மடாலய மடாதிபதி ராஜ தேவேந்திர சுவாமிகள் அருளாசி வழங்கி பேசுகையில், ‘‘தினசரி இறைவனை வழிபடுவது அவசியம். அருகில் உள்ள கோவிலுக்கு, வாரம் ஒரு முறை குடும்பத்துடன் சென்று வழிபடுவது முக்கியம்,’’ என்றார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்தனர்.