பதிவு செய்த நாள்
16
ஜூலை
2025
11:07
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஜூலை 24 ஆடி அமாவாசை திருவிழாவின் போது பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை களைய மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை அன்று மட்டும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வர். ஆனால் அன்று பக்தர்கள் போதிய குடிநீர், மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திப்பது பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது.
இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஜூலை 22ல் பிரதோஷம், 23ல் சிவராத்திரி, 24ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. கடந்த காலங்களில் பக்தர்களுக்கு நேர்ந்த சிரமங்கள் இன்றி மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமாகிறது. கோயிலின் பிரதான நுழைவு வாசல் விருதுநகர் மாவட்டத்திலும், கோயில் மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ளதால் இரு மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அரசுத்துறை அதிகாரிகளிடமும் சரியான திட்டமிடல் இல்லாமல், ஒருவர் பார்த்துக் கொள்வார் என மற்றொருவர் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றனர்.
மிகவும் அபாயகரமான பாதையான சங்கிலிபாறை ஓடையிலிருந்து கோணத்தலை வாசல் வரை உள்ள வழித்தடத்தில் கடந்த ஆண்டு நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கீழே இறங்க முடியாமல் பல மணி நேரம் தண்ணீர் கூட இன்றி தவித்தனர். அப்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார் அடிவாரத்தில் இருந்த விருதுநகர் மாவட்ட போலீசார்களுடன் போதிய அளவிற்கு தண்ணீர் பாட்டில்கள் கொண்டு சென்று கொடுத்து பக்தர்களை அடிவாரம் அழைத்து வந்தார். அப்படி இருந்தும் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். மூன்று மாவட்டங்களில் உள்ள பாதைகள் வழியாக பக்தர்கள் மலையேற நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும். அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 500 மீட்டருக்கு ஒரு இடம் வீதம் சபரிமலை போன்று தொட்டி வைத்து 24 மணி நேரமும் பக்தர்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதே போல் 500 மீட்டருக்கு ஓரிடம் விதம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ மையங்கள் அமைத்து 24 மணி நேரமும் இயங்க வேண்டும். இங்கு பக்தர்களுக்கு குளுக்கோஸ் கரைசல் வழங்க வேண்டும். தற்காலிக கடைகள் மூலம் சர்பத், எலுமிச்சை சாறு, பழவகைகள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். டீ, வடை கடைகளை அனுமதிக்க கூடாது. ஆடி அமாவாசை அன்று ஒரு நாள் மட்டும் மதியம் 2:00 மணி வரை மட்டும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். தரிசனம் செய்தவர்கள் உடனடியாக அடிவாரம் திரும்பவும் அறிவுறுத்த வேண்டும்.
பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன?; அரிய மூலிகைகள் கொண்ட சதுரகிரியில் மாசு ஏற்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். சில்வர் பாட்டில்களில் குடிநீர் கொண்டு வர வேண்டும். பீடி, சிகரெட், தீப்பெட்டிகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.