சிவாஜி நகர்; ஆடி மாதம் துவக்கத்தை முன்னிட்டு, ஸ்ரீ காசி விசாலாட்சிக்கு, நாளை 1,008 தாமரை மலர்களால் அபிஷேகம் நடக்கிறது. சூரியன் தெற்கு நோக்கி நகர்வதை, தட்சிணாயணம் காலம் என அழைக்கப்படுகிறது. இது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை நீடிக்கும். தட்சிணாயணத்தின் முதல் மாதமான தமிழ் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை, ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாளுக்கு, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை 1,008 தாமரை மலர்களால், மூல மந்திரத்துடன் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நவசக்தி திருவிளக்கு பூஜை: ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி திருவிளக்கு பூஜை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை பூஜை நடக்கிறது. இந்த பூஜை, ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 15ம் தேதி ஆகிய நான்கு நாட்களும் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், 96325 06092 என்ற மொபைல் எண்ணில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பூஜையில் பங்கேற்க விரும்புவோர் குத்துவிளக்கு, பஞ்சபாத்திரம், உத்திரணி, இரு தாம்பாளங்கள் கொண்டு வர வேண்டும். பூஜைப்பொருட்கள் ஆலயத்தில் இலவசமாக வழங்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.