திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலின் உபகோவிலான, தட்சிணாமூர்த்தி கோவில் பிரசித்தி பெற்றது. வழக்கமாக, தெற்கு முகம் நோக்கி எழுந்தருள வேண்டிய குருபகவான், இக்கோவிலில் மட்டும் வடக்கு முகம் பார்த்தாற் போல், 10 அடி உயரத்திற்கு அமர்ந்த கோலத்தில், யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இதன் காரணமாக, இக்கோவிலுக்கு வடகுருஸ்தலம் என்று பெயர். இக்கோவிலின், திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, பாலாலய பூஜை இன்று நடந்தது. மூலவர் தவிர, கோபுர கலசம், பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடியும் தருவாயில், மூலவருக்கு பாலாலயம் நடத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.