கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஜூன் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்பு, சக்தி பிறப்பு, கருடாழ்வார் சரித்தம், மாரியம்மன் பிறப்பு, காப்பு கட்டுதல், ஆரியமாலா காத்தவராயன் பிறப்பு, திருக்கல்யாண வைபவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கபிரதக்ஷனம், அலகு போடுதல், அக்னி சட்டி ஊர்வலம், காளி கோட்டை இடித்தல் வைபவம் நடந்தது. பகல் 2:00 மணிக்கு மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். தேரோடும் வீதி வழியாக வடம் பிடித்த இழுத்து சென்றனர். இதில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.