புனித நீராட செல்லும் அம்மன்; ஆடி முழுவதும் நடை அடைக்கப்படும் அம்மன் தலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 11:07
சாயல்குடி; ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உள்ள உமைய நாயகி அம்மன் கோவிலில் மட்டும் ஆடி மாதம் முழுவதும் நடை அடைக்கப்படும் வழக்கம் தொடர்ந்து நடக்கிறது.
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் பழமையும் புராதான சிறப்பையும் பெற்ற உமையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் உமைய நாயகி அம்மன் கோவிலில் கூரை இன்றி அருள்பாலிக்கிறார். நேற்று முன்தினம் மாலை மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தன. பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் மூலஸ்தானம் மற்றும் பிரகாரம், மண்டபம் பூட்டி வைக்கப்படுவது வழக்கம். அன்றைய நாட்களில் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. ஆடி மாதத்திற்கு பின்னர் ஆவணி முதல் நாள் அன்று நடக்கும் அம்மனின் முதல் பார்வை நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்நிகழ்வு கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. ஆடி என்றாலே அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு வகையான விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் இதற்கு விதிவிலக்காக இங்குள்ள கோவிலில் மட்டும் நடை சாத்தப்படுகிறது. உமைய நாயகி அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக செல்வதாக ஐதீகம் உள்ளது என்றனர்.