கோவை ரத்தினபுரி கருமாரியம்மன் கோவிலில் நுழைவு வாசலில் புற்றுக்கண் வடிவ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கருமாரியம்மன் புற்றுக்குள் அமர்ந்து புற்றுக்கண் மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர். கோவை நகரில் மத்தியில், காவல் தெய்வமாக வீற்றிருக்கும் கோனியம்மன் கோவிலில், நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், காலை அம்மனுக்கு பால், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகமும் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதேபோல், சுந்தராபுரம், சாரதாமில் ரோடு முத்துமாரியம்மன் கோவில், பீளமேடு, சேரன்மாநகர், மகாலட்சுமி கோவில், நல்லாம்பாளையத்தில் உள்ள பொங்காளியம்மன் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.