மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்.. ஆக்ரோஷ அம்மனுக்கு எலுமிச்சை சாற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 05:07
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தமிழக கிராமப்புறங்களில் ஆடி மாதம் சிறப்பாக கொண்டாடப்படும், ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நண்பகல் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. உச்சி கால பூஜையின் போது அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை , மடப்புரம் பத்ரகாளியம்மன் ஆக்ரோஷமான தெய்வம் என்பதால் அம்மனை சாந்தப்படுத்த எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்கள் வசதிக்காக சவுக்கு கம்பால் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் வரிசையாக அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகமும் போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மடப்புரம் விலக்கில் இருந்து அரசு பஸ்கள் தவிர வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டு உடனுக்குடன் தண்ணீர் நிரப்பபட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பக்தர்கள் நெரிசல் இன்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர். வரும் வாரங்களிலும் இதுபோன்று முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.