பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
11:07
வடவள்ளி,; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி மாத கிருத்திகையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தாண்டு, ஆடி மாதத்தில், இரண்டு கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. ஆடி மாத முதல் கிருத்திகை நட்சத்திரம் என்பதால், நேற்று அதிகாலை முதலே ஏராளாமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் தங்க கவசத்தில் காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி கிருத்திகையையொட்டி, நேற்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்ததால், படிக்கட்டு பாதையில், பக்தர்கள் நிறுத்தப்பட்டு, 500 பேர் வீதம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மலைப்பாதையில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.