ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவின் 5ஆம் திருநாளான இன்று, காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடக்கிறது.
இன்று காலை 10:00 மணிக்குமேல் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளினார். தொடர்ந்து பெரியபெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 10:00 மணிக்குமேல் பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.