இளையான்குடி அருகே குறும்பசேரி கிராமத்தில் உள்ள வேல்முருகன் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம மக்கள் ஒற்றுமைக்காகவும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிளக்கு பூஜைக்காக கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அதிகாலை வள்ளி,தெய்வானையுடனான வேல்முருகனுக்கு பால்,பன்னீர்,சந்தனம், குங்குமம்,நெய்,இளநீர்,தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பெரும்பச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு முருகன் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.