ஆடி அமாவாசையில் வீட்டில் குல தெய்வத்தை வழிபடுவது முக்கியம் ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 01:07
ஆடி அமாவாசையான இன்று நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அன்னதானம், வஸ்திர தானம் வழங்குவது பல தலைமுறை பாவங்களை தீர்த்து, முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும். அதனுடன் வீட்டில் குல தெய்வத்தை வழிபடுவதும் முக்கியமாகும்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வழிபாட்டு தெய்வத்தினை முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். குழந்தைகளுக்கு முடி எடுப்பது, காது குத்துவது, திருமணப் பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வ பூஜை செய்வது எல்லாமே நம் குலம் தழைக்கச் செய்யப்படுவதாகும். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களின் வழி வந்த குல தெய்வத்தை கோவில் அல்லது வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையான இன்று குல தெய்வத்தை வழிபடுவதால் முன்னோர்களின் அருளுடன் குல தெய்வ அருளும் கிடைக்கும்.