மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர உற்சவம் விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்தும், அர்ச்சனைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்.
இதே போல திருஞானசம்பந்தரால் முதல் தேவார பதிகம் பாடப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டை நாதர் கோவிலில் இருந்து திருநிலை நாயகி அம்பாள், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளை வலம் வந்த போது பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்தும், அர்ச்சனைகள் செய்து அம்பாளை வழிபட்டனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி கோவில் செந்தில் ஆகியோரின் தலைமையிலானோர் செய்திருந்தனர்.