தமிழக அரசின், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், தமிழர்களின் பண்பாடு, கோவில்களின் வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், அயலக தமிழர்களை ஆண்டிற்கு இரு முறை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பஸ் மூலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில், பிரான்ஸ், ஜெர்மன், மலேசியா, கனடா, மியான்மர், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும், அயலக தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று வந்த இவர்கள் கோவிலின் கட்டடக் கலைகள், சிற்பங்கள், நடராஜர் சன்னதியின் பொற்கூரை, 4 கோபுரங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். சிவகாமசுந்தரி சமேத நடராஜர், கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, கோவில் வரலாறு குறித்து அறிந்து கொண்டனர். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கண்காணிப்பாளர்கள் கனிமொழி, தனலட்சுமி ஆகியோர் வழிநடத்துகின்றனர். தொடர்ந்து, கும்பகோணம் அருகே நாதஸ்வரம் தயார் செய்யும் இடத்தை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.