விளாச்சேரியில் தயாராகும் கிருஷ்ணர் சிலைகள்; தயாரிக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 11:08
திருநகர்; விளாச்சேரியில் கிருஷ்ண ஜெயந்திக்காக கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
விளாச்சேரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், மூன்று இன்ச் முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள், இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்டை பயன்படுத்தித் தயாரிக்கின்றனர். ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: பரம்பரையாக பொம்மை தயாரிக்கும் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளோம். கிருஷ்ண ஜெயந்தி நெருங்குவதால் வழக்கமாக தயாரிக்கும் கிருஷ்ணர் சிலைகளுடன் இந்தாண்டு கிருஷ்ணர் செட்டுகள் தயாரிக்கிறோம். ஆறு முதல் ஒரு அடி வரை களிமண்ணிலும், ஒரு அடி முதல் நான்கு அடி உயரத்தில் காகித கூழாலும் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். வீட்டு அலங்காரத்திற்காக பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரித்து கொடுக்கிறோம் . தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள், காதி விற்பனையகங்களில் இங்கு தயாராகும் சிலைகளே விற்பனைக்கு உள்ளன. வெளி மாநிலத்தினருக்கும் தயாரித்து கொடுக்கிறோம். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு கிருஷ்ணர் சிலைகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.