பழநி; பழநி கோயில் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகளில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
பழநி கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடத்திற்குள் முருகன் கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது. ஜூலை 15,முதல் ரோப் கார் நிறுத்தப்பட்டு, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ரோப் கார் வடக்கயிறில் இருந்து பெட்டிகள் அகற்றப்பட்டு ரோப் உறுதித்தன்மை ஆய்வு, பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. பெட்டிக்கு 300 கிலோ விதம் ஒரு பக்கம் நான்கு பெட்டிக்கு மட்டும் எடை வைத்து சோதனை செய்யப்பட்டது. அதேபோல் மறுபுறம் உள்ள நான்கு பெட்டிக்கும் சோதனை செய்யப்பட்டது. அதன் பின் இருபுறமும் எடைகள் ஏற்றி ரோப்கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. சோதனைகள் நிறைவு பெற்றபின் பொறியாளர்களிடம் அனுமதி பெறப்பட்டு கோயில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தபின் இயக்கப்படும்.