மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆகம விதிகள் மீறப்படுகிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2025 11:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஆகமவிதிகளுக்கு முரணாக தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திருவிழா காலங்கள், சபரிமலை சீசன், தொடர் விடுமுறை போன்ற சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் வகையில் கூட்டம் இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நடை அடைக்கப்பட்டு விட்டது என்றுக்கூறி தரிசன டிக்கெட் தராமல் ஆகமவிதிகளை காத்து இருந்தனர். ஆனால் சமீபகாலமாக கூட்டத்தை சமாளிக்கவும், பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் ஆகமவிதிகளை மீறி நடைசாத்தப்படாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகமவிதிப்படி உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:30 மணிக்கு நடைசாத்த வேண்டும். மீண்டும் மாலை 4:00 மணியளவில் சாயரட்சை பூஜையின்போது நடைதிறக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசன டிக்கெட் அதிகமாக வழங்குவதால் சில சமயம் மதியம் உச்சிக்கால பூஜை முடிந்து 3:00 மணி அல்லது 3:30 மணி வரை நடை திறந்து வைக்கப்படுகிறது.
இரவில் அர்த்தசாம பூஜை முடிந்த உடன் பள்ளி அறை பூஜை செய்து 9:30 மணிக்கு நடை சாத்தப்பட வேண்டும். இதை பூத காலம் என்பர். இந்நேரத்தில் பூஜையும், பக்தர்கள் தரிசனமும் செய்யக்கூடாது. செய்தால் அதற்குரிய பலன் கிடைக்காது. ஆனால் இரவு நடைசாத்த 11:30 மணியாகி விடுகிறது.பக்தர்கள் கூறியதாவது: வருமானத்திற்காக ஆகம விதிகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதை மதிக்காமல் நடப்பது கோயில் புனிதத்திற்கு எதிரானது. இதை தவிர்க்க அபிஷேகம், பூஜை காலங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கக்கூடாது. உச்சிக்கால பூஜையை கணக்கிட்டு காலை 11:30 மணிக்கு மேலும், பள்ளியறை பூஜையை கணக்கிட்டு இரவில் 8:30 மணிக்கு மேலும் டிக்கெட் வழங்காமல் இருந்து ஆகமவிதிகளை கடைபிடிக்கலாம் என்றனர்.