பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார்.
பிரதோஷம் நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன் மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ தினத்தன்று இவரை வழிபடுவது சிறப்பான பலன் தரும். முக்கியமாக கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற, மனக் குழப்பம் தீர, எதிரிகள் குறித்த பயம் நீங்க வேண்டி, இவருக்கு தயிர் சாதம் பானகம் அல்லது காய்ச்சிய பாலை நைவேத்தியம் செய்து பிரார்த்திக்கிறார்கள். 48 நாட்கள் விரதமிருந்து வழிபடுவது சிறப்பு. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை சொல்லி வழிபடுவோருக்கு நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.