திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் ஆண்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் கரகம் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை முத்தரையர் இளைஞர் சங்கம் மற்றும் குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.