நாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பதிவு செய்த நாள்
23
ஆக 2025 10:08
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்த நாளை, நினைவு கூறும் வகையில் கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி நடந்தது. நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன் பிடிக்க செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை சிவ பெருமானை நினைத்து, வணங்கி கடலில் விட்டு விடுவது அதிபத்தரின் வழக்கம். அதிபத்தரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் சில நாட்கள் அதிபத்த நாயனாரின் வலையில் மீன்கள் சிக்காமல் செய்தார். இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. சில நாட்கள் கழித்து வறுமையில் வாடிய, அதிபத்த நாயனாரின் வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி சிவபெருமான் செய்துள்ளார். வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் ஒரு மீனையும், இறைவனை நினைத்து கடலில் விட்டு விட்டு வெறுங்கையுடன் அதிபத்த நாயனார் வீட்டிற்கு திரும்பியுள்ளார் குடும்பத்தினர் வயிற்றுக்கு உணவில்லாமல் வறுமையில் வாடிய நிலையில்,ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் நவரத்தினங்களால் ஆன தங்க மீன் சிக்கியுள்ளது. தங்க மீனாயினும் தயங்காது இது அருட் கூத்தாடும் எம் பெருமான் சிவனுக்கு உரியது என மகிழ்ச்சியோடு கடலில் விட்டுள்ளார். அதிபத்த நாயனாரின் தீவிர பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி அதிபத்த நாயனாருக்கு காட்சியளித்தார். அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நேற்று மதியம் சிவபெருமான், தேவியருடன், நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டார். நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும், நாகை, புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. பின் அதிபத்த நாயனார் படகில் சென்று கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜின் சம்பத், முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
|