விழுப்புரம்; மாவட்டத்தில், கண்டறியப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பத்தை, அருங்காட்சியக காப்பாட்சியர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொளசூர் கிராமத்தில், பல்லவர் கால கொற்றவை சிற்பம் இருந்ததை, விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் அண்மையில் கண்டறிந்தார். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த சிற்பம், உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் உத்தரவின் பேரில், கடலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா, நேற்று மொளசூர் கிராமத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்போது உடனிருந்த ஆய்வாளர் செங்குட்டுவன், சிற்பத்தின் அமைப்புகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, கொற்றவை சிற்பத்தின் அமைவிடம், பாதுகாப்பு, பொதுமக்கள் வழிபாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, காப்பாட்சியர் ஜெயரத்னா விரிவாக ஆய்வு செய்தார். இது தொடர்பான அறிக்கை, துறையின் இயக்குநருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் பழமைவாய்ந்த சிற்பங்களை, உரிய முறையில் பாதுகாக்க அரசு அருங்காட்சியகங்கள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செங்குட்டுவன் கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது லயன் சங்க தலைவர் கார்த்திக் உடனிருந்தார்.