குன்றத்தூரில் குவிந்த பக்தர்கள்; கொட்டும் மழையில் நடந்த அம்மன் ஊஞ்சல் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 12:08
குன்றத்தூர்; ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மேல்மலையனூரில் உள்ள அம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெறுவது வழக்கம் அளவுக்கு அதிகமான கூட்டம் மற்றும் நீண்ட தூர பயணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று அதனை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் குன்றத்தூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அங்கு நடப்பது போன்று இங்கும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் சேவை செய்ய முடிவு செய்யப்பட்டு அதன்படி கடந்த மூன்று மாதங்களாக அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் கையில் சிவலிங்கத்துடன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் குடைபிடித்தபடி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியை பார்த்து மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். மேலும் பலர் எலுமிச்சை பழங்களில் கற்பூரத்தை ஏற்றி சூடம் காட்டி அதன் பிறகு சூலத்தில் எலுமிச்சை பழத்தை குத்தி விட்டு சென்றனர். கொட்டும் மழையில் நடந்த ஊஞ்சல் சேவையை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுக்களித்தது குறிப்பிடத்தக்கது.